பதிவு செய்த நாள்
03
நவ
2021
04:11
பல்லடம்: நமக்குள் இருக்கும் நரகாசுரனை அளிப்போம் என, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் அருளாசி வழங்கி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஐப்பசி மாத அமாவாசை நாளில், பாரத நாடு முழுவதும் கொண்டாடும் தீபாவளி பண்டிகையால் மக்கள் மன நிறைவு கொள்கின்றனர். தேவர்களுக்கும், மக்களுக்கும் துன்பம் கொடுத்த நரகாசுரனை அழித்து தீமை விலகிய நாளாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி குறித்து எண்ணற்ற வரலாற்று கதைகள் உண்டு. வாழ்க்கையில் நாம் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையே, இதுபோன்ற புராண கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. களவு, பொய், தீண்டாமை, மது அருந்துதல், பஞ்சபாதகம், உழைக்காமல் உண்பது, அதிக உறக்கம், பெற்றோர் சொல் மீறுதல் உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து விடுபட்டு, நமக்குள் இருக்கும் நரகாசுரனை அழிப்போம். அதிகாலை எழுந்து எண்ணை குளியல் செய்து, புத்தாடை அணிந்து, இறைவனை வணங்கி, இனிப்புகள் உண்டு தீபாவளியைக் கொண்டாடுவோம். பிறருக்கு மனிதநேயத்தை காட்டி, நோய் நொடிகள் நீங்கி சாந்தமாகவும், மன நிறைவுடனும் வாழ இறைவனை பிரார்த்திப்போம் என்றார்.