பதிவு செய்த நாள்
09
நவ
2021
03:11
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்க பக்தர்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காரமடை அடுத்த குருந்தமலையில், மிகவும் பழமையான குழந்தை வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசம், சூரசம்ஹாரம், பங்குனி உத்திரம் என பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் காரமடை சுற்றியுள்ள கிராம மக்களும், கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களும் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் கொரோனா நோய் தொற்று தடுப்பு காரணமாக, கோவில்களில் நடைபெறும் விழாக்களில், பக்தர்கள் பங்கேற்பதற்கு, அரசு தடைகளை விதித்துள்ளது.
குருந்தமலை கோவிலில் சூரசம்ஹார விழா, கடந்த, 4 ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்று வருகிறது. இன்று மாலை, 5:00 சூரசம்ஹார விழா நடைபெற உள்ளது. மலையைச் சுற்றி நடைபெறும் சுவாமி ஊர்வலத்தில், கோவில் ஊழியர்களும், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்பர். விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சுவாமி ஊர்வலம் முடிந்த பிறகு, சுவாமியை வழிபட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாளை, 10 ம் தேதி, 9:15 திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து, தெப்போற்சவமும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. இத்தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி ராமஜோதி தெரிவித்தார்.