பொங்கலூர்: பொங்கலூர் குளத்துப்பாளையம் கனககிரி வேலாயுதசுவாமி திருக்கோவிலில் சூரசம்ஹாரம் நடந்தது.
பொங்கலூர் குளத்துப்பாளையம் கனககிரி வேலாயுத சுவாமி திருக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கந்தர் சஷ்டி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. கந்தர் சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று மாலை சூரசம்காரம் நடந்தது. விஷ்வநாதர், விசாலாட்சி அம்மனிடம் வேல் வாங்கிய வேலாயுதசுவாமி சூரபத்மனை நான்கு இடங்களில் சம்ஹாரம் செய்தார். பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதராக அருள்பாலித்த வேலாயுத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மகா தீபாராதனை நடந்தது. கடந்த ஒரு வாரமாக விரதமிருந்த பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து பிரசாதம் அருந்தி விரதத்தை முடித்தனர். சூர சம்ஹார விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை சுவாமி திருக்கல்யாணம், அன்னதானம் நடக்கிறது.