சபரிமலை செல்லும் பக்தர்கள் எருமேலியில் உள்ள வலிய அம்பலம் தர்ம சாஸ்தா, கொச்சம்பலம் பேட்டை சாஸ்தா கோவில்களை முதலில் தரிசிப்பர். இங்கு தான் எருமைத்தலை அரக்கியான மகிஷியை ஐயப்பன் கொன்றார். எருமைக்கொல்லி என்னும் சொல்லே ‘எருமேலி’ என திரிந்தது என்பர். பக்தர்கள் வேடர்களைப் போல இலை, தழைகளை உடம்பெங்கும் செருகியபடி ஆடிப்பாடுவர். இதற்கு பேட்டை துள்ளல் என்று பெயர். சுவாமி ஐயப்பனின் படைகள் சபரிமலை காட்டிற்குள் நுழையும் முன் இங்கு ஆடிப் பாடியதை நினைவுபடுத்தும் விதத்தில் இந்தச்சடங்கு நடத்தப்படுகிறது.