மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி: பக்தர்கள் புனித நீராடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2021 06:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற கடைமுக தீர்த்தவாரி விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். திருவாவடுதுறை ஆதீனம் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் இன்று நடைபெற்றது. விழாவில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத ஐயாறப்பர் சுவாமி, தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி, விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சுவாமி ஆலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் காவிரியின் இரு கரைகளிலும் எழுந்தருளினர். தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையிலும். வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் முன்னிலையிலும் காவிரி துலாக்கட்டத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.