பிறந்தது கார்த்திகை.. சரண கோஷம் முழங்க விரதம் துவங்கிய ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2021 09:11
கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரத்தை தொடங்கியுள்ளனர். தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. கார்த்திகை மாத தொடக்கத்தில் இருந்து பெண்கள் தங்களது இல்லத்தின் வாசல்களில் அகல் விளக்குகளை ஏற்றி வைப்பது உள்ளிட்ட பல்வேறு தெய்வ வழிபாடுகள் நடக்கும். இதேபோல் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1ம் தேதி அதிகாலையில் இஷ்ட தெய்வங்களை வணங்கி கோவில்களுக்கு சென்று குருசாமி முன்னிலையில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். ஐயப்பன் கோவில்களுக்கு மாலை அணிந்து செல்பவர்கள் எல்லாம் நேற்று மாலைகள், காவி வேஷ்டிகள், பூஜை பொருட்களை எல்லாம் வீடுகளுக்கு வாங்கி சென்றனர். இன்று அவர்கள் காலையில் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று குருசாமி, கோவில் குருக்கள் முன்னிலையில் பயபக்தியுடன் சரண கோஷம் முழங்க மாலைகளை அணிந்து கொண்டனர். கார்த்திகை மாதப்பிறப்பினை தொடர்ந்து காலையில் ஏராமான ஐயப்ப பக்தர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்கு வந்து மாலை அணிந்து சென்றனர். இதேபோல் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வெளியூரை சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பதற்காக வந்திருந்தனர்.