வேதாரண்யம் மறைநாதசுவாமி கோயிலில் ஒரு நாள் இரவு எலி ஒன்று கருவறை விளக்கில் இருந்த நெய்யைக் குடிக்க வந்தது. அப்போது தவறுதலாக அதன் மூக்கு பட்டதால் அணைய இருந்த தீபச்சுடர் துாண்டப் பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறக்கும் பாக்கியத்தை அடைந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவம் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகும். அதனால் திருக்கார்த்திகையன்று கோயில்களில் விளக்குத்துாண், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபங்களை ஏற்றுவர். சொக்கப்பனை கொளுத்துவர். அக்னியைப் போல் ஒளி வீசும் சிவன், முருகனை வழிபடவே இத்தீபங்கள் ஏற்றப்படுகின்றன. தீபத்தின் பெருமையை ‘தீபமங்கள ஜோதீ நமோநம’ என திருப்புகழ் போற்றுகிறது.