சிவராமனும், கோபாலும் நீண்டகால நண்பர்கள். ஒருநாள் காலையில் ‘‘இன்றிரவு என் மனைவியுடன் உன் வீட்டிற்கு வருகிறேன்’’ என்று அலைபேசியில் தகவல் தெரிவித்தார் சிவராமன். ‘‘மகிழ்ச்சி...வரும் போது நீ எனக்கு ஓரு உதவி செய்ய வேண்டும். பேக்கரியில் கொஞ்சம் காஸ்ட்லியான ‘கேக்’ ஒன்றை வாங்கி வா’’ என்றார்.
எதற்காக என சிவராமன் கேட்டபோது, ‘‘என் மகன் தேர்வில் வெற்றி பெற்றுள்ளான். அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்த விரும்புகிறேன்.
என்னால் இப்போதைக்கு வெளியில் செல்ல முடியவில்லை என்பதால் நீ வாங்கி வந்தால் உதவியாக இருக்கும்’’ என்றார்.
விலை மதிப்பு மிக்க ‘கேக்’ ஒன்றை சிவராமனும் வாங்கி வந்தார்.
அன்றிரவில் கொண்டாட்டம் சிறப்பாக முடிந்தது. மறுநாள் பகலில் ஊருக்கு கிளம்பத் தயாரானார் போது கேக்கின் விலை என்ன என்று கேட்டு அதற்கான பணத்தை கோபால் கொடுப்பார் என சிவராமன் எதிர்பார்த்தார்.
ஆனால் அவரோ, ‘‘கொஞ்சம் பெரிய கேக்காக வாங்கி விட்டாய். மீதமாகிப் போனதை உன் குழந்தைகளுக்குக் கொடு’’ என்று சொல்லி பார்சல் ஒன்றைக் கொடுத்தார்.
கேக்குக்கான பணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் மீதிக் கேக்கை நம் தலையில் கட்டி விட்டானே என்ற கவலையுடன் புறப்பட்டார் சிவராமன். வழி நெடுக பணம் தரவில்லையே என மனைவியிடம் ஆத்திரப்பட்டார் ‘‘சும்மா இருங்கள். நீங்கள் அவரின் பால்ய காலத்து நண்பர் அல்லவா... ஒருவேளை அவர் பணம் தர மறந்திருக்கலாம் அல்லது நாளை பணம் அனுப்ப நினைத்திருப்பார்’’ என ஆறுதல் சொன்னாள். ஆனால் சிவராமன் மனம் ஏற்கவில்லை.
வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக பார்சலை பிரித்தார். அதில் கேக்குடன் பணமும், ஒரு கடிதமும் இருந்தது.
அதில் ‘‘நண்பா... என் பேச்சை மதித்து என் மகனுக்காக கேக் வாங்கியதற்கு நன்றி. பணம் எவ்வளவு என்று கேட்டு உன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்த விருப்பமில்லை. பணம் வாங்க மறுப்பாய் என்பதும் எனக்குத் தெரியும்.
அதனால் தான் பார்சலில் வைத்து அனுப்பினேன். தயவு செய்து பெற்றுக் கொள்’’ என்றிருந்தது.
சிவராமனுக்கு கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. எவ்வளவு தவறாக எண்ணி விட்டேன்.
ஆனால் நம்மைப் பற்றி எவ்வளவு உயர்வாக எண்ணியிருக்கிறான் என வருந்தினார். உடனடியாக அலைபேசியில், ‘நண்பா... உன்னைத் தவறாக புரிந்து கொண்டேன். மன்னித்து விடு’ என்று சொல்லப் போவதாக கூறினார். அதற்கு அவள்,
‘மீண்டும் தவறு செய்யாதீர்கள் உங்களைப் பற்றி உயர்வாக நினைத்திருப்பவரிடம், ‘உங்களைப் பற்றி தவறாக நினைத்து விட்டேன்’ என்று சொன்னால் சங்கடப்படுவார். உங்களின் மீதான மதிப்பு குறையும்’’ என்றாள்.
இந்த நண்பரின் மனநிலையில் தான் பெரும்பாலான மனிதர்கள் இருக்கிறார்கள். அவசரப்பட்டு மற்றவர்களின் நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் தவறாக விமர்சனம் செய்கிறார்கள். ஒருவரின் மனதிலுள்ள எண்ணத்தைக் கடவுள் ஒருவரே நன்கு அறிவார்.
ஆதாரம் இல்லாமல் அவசரப்பட்டு குறை சொல்வது கூடாது. தவறே செய்திருந்தாலும் ஏதோ நிர்பந்தம் அல்லது காரணம் இருக்கும் எனக் கருதினால் யாருக்கும் இழப்பு ஏற்படாது. யூகத்தின் அடிப்படையில் ஒருவரைக் குற்றவாளியாக கருதினால் உண்மையில் நாம் தான் குற்றவாளியாவோம். நல்லதையே சிந்திப்போம். நலமுடன் வாழ்வோம்.