பதிவு செய்த நாள்
23
நவ
2021
05:11
கார்த்திகை மாதம் சிவன், முருகன் வழிபாட்டுக்கு ஏற்றது. காரணம் கார்த்திகை நட்சத்திரத்துக்கு உரிய தெய்வம் முருகன். கார்த்திகை மாதத்துக்கு உரிய கிரகம் சூரியன். சூரியனின் அதிதேவதை சிவன். இந்த மாதத்தில் கோயிலில் ஒரு விளக்கு ஏற்றினாலும் அனைத்து நலன்களும் கிடைக்கும். அதற்குரிய விசேஷ தலமாக மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கஞ்சா நகரம் கார்த்திகா சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது.
அசுரர்களின் அட்டகாசம் பூலோகத்தில் தலை விரித்தாடியது. பஸ்மாசுரன், சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர் கூட்டம் முனிவர்களை படாதபாடு படுத்தியது. யாகம், தவம் என எங்கு நடந்தாலும் அவற்றை அழித்தனர்.
அவர்களின் அட்டூழியம் பொறுக்க முடியாத முனிவர்கள் உலகன்னையான பார்வதியிடம் முறையிட்டனர்.
அப்போது சிவபெருமான் ‘காத்ர ஜோதி’ என்னும் யோக நிலையில் இத்தலத்தில் தவத்தில் ஈடுபட்டிருந்தார். சுவாமியிடம் முறையிட முனிவர்களை இந்த தலத்துக்கு அழைத்து வந்தாள் பார்வதி. யோக நிலையில் இருந்த சிவன் எதிர்பாராமல் பார்வதியைக் கண்டதால் தவம் கலையப் பெற்று நெற்றிக்கண்களைத் திறந்தார். அதிலிருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவை அழகான குழந்தைகளாக மாறின. அவர்களை வளர்க்கும் பேறு கார்த்திகைப் பெண்களுக்கு கிடைத்தது. சிவனால் தீர்மானிக்கப்பட்ட நேரம் வந்ததும் ஆறு குழந்தைகளும் ஒரே வடிவமாயின. அவரே ‘கார்த்திகேயன்’ எனப் பெயர் பெற்றார். இந்தக் கார்த்திகேயன் என்னும் முருகப்பெருமானே அசுரர்களை அழித்து தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார்.
ஆக இந்த கஞ்சா நகரமே ‘கார்த்திகேயன் உருவான சிவத்தலம்’. தனக்கு வடிவம் கொடுத்து ஆட்கொண்ட சிவனை முருகப்பெருமான் கஞ்சா நகரத்தில் பூஜை செய்து கொண்டிருக்கிறார். சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து பொன்னிறத்தில் ஒளி (ஜோதி) வெளிப்பட்டதால் இந்த ஊர் ‘பொன் நகர்’ ‘காஞ்சன நகர்’ என பெயர் பெற்றது. ‘காஞ்சனம்’ என்றால் தங்கம் என்பது பொருள். ‘காஞ்சன நகர்’ என்பதே தற்போது ‘கஞ்சா நகரம்’ என மருவியது.
கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்த காரணத்தால் இக்கோயில் கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய பரிகாரத் தலமாக உள்ளது. கார்த்திகை நட்சத்திரம், கார்த்திகை மாதத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபட்டால் நன்மை பெருகும். வாழ்வில் முன்னேற்றம், தொழிலில் வளர்ச்சி, உயர்ந்த பணி அமைய கார்த்திகா சுந்தரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
இங்குள்ள மூலவர் சிவனுக்கு கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்பது திருநாமம். ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க இங்கு சோழர் மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர். இங்குள்ள சிவலிங்கத் திருமேனி மேற்கு நோக்கியிருக்கும் சுயம்பு வடிவமாகும். இங்குள்ள அம்பிகை துங்க பாலஸ்தனாம்பிகை எனப்படுகிறார். நான்கு கைகளில் சங்கு, சக்கரம், நீலோத்பல மலர், கிளியை ஏந்தியபடி உள்ளார். இந்த கிளியை சர்வேஸ்வரன் என்றும், அது அம்மனின் காதில் வேதம் ஓதுவதாக சொல்கிறார்கள். வியாச மகரிஷியும், சுகப்பிரம்மரும் அம்மனை தரிசித்து அருள் பெற்றுள்ளனர். கருவறை மீதுள்ள விமானத்தில் சட்டநாதர் சன்னதி உள்ளது. வெள்ளிக்கிழமை இரவில் இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, முருகன், துர்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் என சன்னதிகள் உள்ளன. திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு விசேஷ அபிஷேகம், வழிபாடு நடக்கும். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாறர் அவதரித்து முக்தி பெற்ற தலம் இது.
எப்படி செல்வது: மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் 8 கி.மீ.,
விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, சனி பிரதோஷம், பங்குனி உத்திரம்
நேரம்: காலை 10:00 – 11:00 மணி, மாலை 4:00 – 5:00 மணி
தொடர்புக்கு: 04364 – 282 853, 94874 43351