பதிவு செய்த நாள்
29
நவ
2021
01:11
ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுாரில், தனியார் அறக்கட்டளை சார்பில் நிர்வகிக்கப்பட்ட சிவன் கோவிலை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அவசர கதியில் அகற்றிய வருவாய் துறையினர் நடவடிக்கைக்கு, பக்தர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் பூஜை செய்து, இப்பிச்னையை சட்ட ரீதியில் சந்திக்க பக்தர்கள் சபதம் ஏற்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, கிளாய் கிராமத்தில், ஸ்ரீபெரும்புதுார் ஏரி கலங்கல் அருகே தபோவனம் அறக்கட்டளை சார்பில், சிவன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. பின், பக்தர்களின் நன்கொடையால் இந்தக் கோவில் விஸ்தரிக்கப்பட்டு, அம்மன் சன்னதி, நாயன்மார்கள் சன்னதி, அன்னதானக் கூடம் ஆகியவை கட்டப்பட்டன.ராஜகோபுரம் எழுப்பப்பட்டு, கனக கருவறையில் கனக காளீஸ்வரர் அருள்பாளித்தார். இந்த கோவிலில், பல்வேறு முக்கிய பூஜைகள் நடத்தப்பட்டதுடன், சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிறிய கோவில்களின் பராமரிப்புக்கும், அறக்கட்டளை சார்பில் உதவி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோவிலில், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வந்த நிலையில், பெரிய ஏரி கலங்கல் பகுதியில், ஓடை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாகவும், இந்த கோவில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டதாகவும், வருவாய் துறை சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தினங்களுக்கு முன், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற குழுவினர், பொக்லைன் இந்திரம் மூலம் கோவில் மற்றும் அதை ஒட்டிய அன்னதானக் கூடத்தை இடித்து தள்ளினர். அங்கிருந்த தனியார் கேண்டீனும் இடிக்கப்பட்டது.
எனினும், கோவில் ஆக்கிரமிப்பில் இருப்பது குறித்தும், அதை அகற்றுவது குறித்தும், கோவில் நிர்வாகத்திற்கு வருவாய் துறை சார்பில் எவ்வித முன்னறிவிப்போ அல்லது நோட்டீசோ வழங்கப்படவில்லை என, கோவில் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். கலெக்டரிடம் சென்று முறையிட்டு திரும்பும் நேரத்திற்குள், அவசரகதியில் கோவிலை இடித்து தள்ளியதாக பக்தர்கள் வேதனை தெரிவித்துஉள்ளனர். பாலாலாயம் செய்து சிலைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறியும், மாவட்ட வருவாய் அலுவலர் அவகாசம் வழங்காமல் காவல் துறை மூலம் பக்தர்களை விரட்டி அடித்து, கோவிலை இடித்து தரைமட்டமாக்கியதாக பத்தர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இந்நிலையில், ஹிந்து அமைப்பினர் சிலர், ஸ்ரீபெரும்புதுாரில் நேற்று முன்தினம், சிவன் கோவில் இடிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மீது, காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த பிரச்னையை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் கூறி, கலைந்து சென்றனர். பின், கோவில் இடிக்கப்பட்ட இடத்தில், பகல் 1:00 மணிக்கு, 200க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் ஒன்று திரண்டு பூஜை செய்தனர்.
அப்போது, மதமாற்று சக்திகளுக்கு அடி பணிய மாட்டோம், வழிபாட்டு தலத்தை இடிக்க பின்னணியாக இருந்த அரசியல் கட்சிக்கு எந்த காலத்திலும் வாக்களிக்க மாட்டோம் என சபதம் ஏற்றனர். மதமாற்ற கும்பலுக்கு ஆதரவாக, அரசு அதிகாரிகள் சிலர் செயல்பட்டுள்ளதாகவும், கோவில் பக்தர்கள் குற்றம் சாட்டிஉள்ளனர். இந்த கோவிலின் கருவறை, 15 சென்ட் பட்டா நிலத்தில் கட்டப்பட்டது. இதை ஒட்டி இருந்த அன்னதான கூடம், மதில் சுவரை மட்டும் இடிப்பதாக மாவட்ட வருவாய் அலுவலர் வாக்குறுதி அளித்தார். அது குறித்து நோட்டீஸ் ஏதும் அளிக்கப்படவில்லை. எனவே, நாங்கள் கலெக்டரை சந்தித்து முறையிட சென்றோம். திரும்பி வருவதற்குள், கோவில் முழுவதையும் இடித்து தள்ளிவிட்டனர். பாலாலயம் செய்து, ஆராதனை மூர்த்திகளை வெளியேற்றக்கூட அவகாசம் அளிக்கவில்லை. 2 கோடி ரூபாய் செலவில் பக்தர்களால் கட்டப்பட்ட கோவிலை இடிப்பதற்காக, அங்கிருந்த பக்தர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். எஸ். கிருஷ்ணமூர்த்தி, 48,தபோவனம் அறக்கட்டளை நிறுவனர், ஸ்ரீபெரும்புதுார்.