குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: கோயிலில் தண்ணீர் புகுந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2021 01:11
குற்றாலம்: குற்றால அருவிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தினால் குற்றாலநாதர் கோயில் சன்னதி பஜார், கோயிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. தென்காசி மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணைகள் நிரம்பியுள்ளன.
மேலும் ஆற்றுப்படுகை, கால்வாய்களிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து ப்படுகிறது. குற்றாலம் அருவிகள் அனைத்திலும் வெள்ளப்பெருக்கு காணப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே மழை பெய்தவண்ணம் இருந்தது. மாலை நேரங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழையினால் குற்றாலம் சன்னதி பஜாரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்பாள் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. தொடர்ந்து பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் சில மணிநேரம் அருவியே தென்படாத வகையில் தண்ணீர் ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்தது. பழையக் குற்றாலத்தில் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீரால் படிக்கட்டுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஐந்தருவியில் 5 கிளைகள் தெரியாதவாறு ஒரே அருவியாக தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டியது. அதேபோல புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது. குற்றாலம் அண்ணாசிலை அருகிலுள்ள பாலத்தின் மேலும் தண்ணீர் வந்ததால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.