பதிவு செய்த நாள்
29
நவ
2021
04:11
பவானி: அறநிலையத்துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரி மலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி, ஈரோடு மாவட்ட செயற்குழு, பொதுக்குழு கூட்டம், பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தில் நேற்று நடந்தது. மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற, இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாவது: தமிழகத்தில், அனைத்து கோவில்களிலும் வழிபாடு தொடங்கி விட்டது. ராமேஸ்வரத்தில் புனித தீர்த்தங்கள் திறக்கப்பட்டு விட்டன. ஆனால், காசிக்கு இணையான திருத்தலமான பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், திதி, தர்ப்பணம் தர தடை தொடர்கிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்க கூடாது. இதை வலியுறுத்தி டிச.,6ல், அனைத்து டோல்கேட்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம். அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும், 5,000 ஏழை பக்தர்கள், சபரிமலை யாத்திரை மேற்கொள்ள, 6,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். கோவை மண்டலத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை முடக்கி வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.