முக்காணி ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடை விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2012 11:07
தூத்துக்குடி : குருவித்துறை முக்காணி ஸ்ரீ ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடை விழா நேற்று கோலாகலமாக நடந்தது. நேற்று நடந்த அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். குருவித்துறை முக்காணி ஸ்ரீ ஆதிபரமேஸ்வரி அம்பாள் கோயில் கொடை விழா யாதவர் சமுதாயம் சார்பில் கடந்த 1ம் தேதி காலையில் பந்தல் திறப்பு விழாவுடன் துவங்கியது. தொடர்ந்து அன்று இரவு நையாண்டி மேள கச்சேரி நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு மகுட இசை கச்சேரியும், இரவு 11 மணிக்கு வில்லிசை கச்சேரியும் நடந்தது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு மாக்காப்பு தீப ஆராதனை நடந்தது. விழாவில் முக்கிய நாளான நேற்று காலை 8 மணிக்கு தாமிரபரணியிலிருந்து அம்பாளுக்கு பால்குடம் எடுத்து மேளதாளத்துடன் ரத வீதி வருதல் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து பகல் 12 மணிமுதல் 2 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும், அலங்கார தீபஆராதனையும் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை 5 மணிக்கு தாமிரபரணியிலிருந்து அம்பாளுக்கு மேளதாளத்துடன் திருமஞ்சன குடம் எடுத்து வீதிவலம் வருதல் நிகழ்ச்சிநடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று இரவு 12 மணிக்கு அம்பிகைக்கு அலங்கார தீபஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். விழாவில் இன்று ( 4ம் தேதி )காலை 10 மணிக்கு அம்பாள் மஞ்சள் நீராடி மகுடத்துடன் வீதிவலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் 5ம் தேதி இரவு 9 மணிக்கு இன்னிசை கச்சேரியும், 6ம் தேதி இரவு நகைச்சுவை பட்டிமன்றமும் நடக்கிறது. 7ம் தேதி இரவு நகைச்சுவை நாடகமும் நடக்கிறது. 8ம் தேதி யாதவர் இளைஞர் அணிசார்பில் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை யாதவர் கொடை விழா கமிட்டியார் செய்துள்ளனர்.