பதிவு செய்த நாள்
04
ஜூலை
2012
11:07
செண்பகவனம் எனும் பாளையங்கோட்டை, தாமிரபரணி நதிக்கரையின் ஓரத்தில் அமைந்திருந்ததால் செல்வ செழிப்புடன் இவ்வூர் மக்கள் வாழ்ந்து வந்தனர். இந்த ஊரின் பாதுகாப்பிற்காக மேற்கு பகுதியில் மேல கோட்டை வாசல் அமைக்கப்பட்டது. பாளை.,யின் கன்னி மூலமான மேல கோட்டை பகுதியில் விநாயகர் கோயில் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டு, அங்கு பிரசன்ன விநாயகர் கோயில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது."கோட்டை விநாயகர்: இந்த கோயிலின், மேல் பகுதியில் இருந்து வீரர்கள் எதிரிகளை தாக்க வசதியாக கண்காணிப்பு கூண்டு அமைக்கப்பட்டு, கோயிலை சுற்றி அகலி அமைக்கப்பட்டிருந்தது. கோட்டையில் அமைந்துள்ளதால் பிரசன்ன விநாயகரை "கோட்டை விநாயகர் என்ற பெயரும் பக்தர்கள் செல்லமாக அழைப்பதுண்டு.பாளையங்கோட்டைக்கு ஆதி விநாயகரான பிரசன்ன விநாயகர் கோயிலில் காலை 6 மணிக்கு முதல்கால பூஜையின் போது மணி அடிப்பது வழக்கம். இந்த மணி சப்தம் கேட்ட பின்பு தான் பாளை.க்கு கிழக்கே உள்ள சிரத்தை விநாயகர் (சிரட்டை விநாயகர்) கோயிலில் பூஜை துவங்கும். அதன் பின் ஊருக்கு மத்தியில் அமைந்துள்ள வன்னி விநாயகர் கோயிலில் (அசோக் தியேட்டர் அருகேயுள்ள கோயில்) பூஜை நடக்கும். தொடர்ந்து புதுக்கோட்டை விநாயகர் கோயிலில் பூஜை முடிந்து, பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் அன்றைய பணிகளை துவக்கியதாக பக்தர்கள் கூறுகின்றனர்.மிக பழமையான இந்த கோயிலில் திருமேனி பட்டர் எனும் சித்தர் தினமும் பிரசன்ன விநாயகருக்கு வழிபாடு நடத்தி வந்ததால் அர்த்த மண்டபத்தில் உள்ள கூரையில் இவரது உருவம் பொறிக்கப்பட்டிருப்பதை தற்போதும் காணலாம்.
மேலும் பக்தர்கள் தரிசன மண்டபத்தில் உள்ள தூணில் திருமேனி பட்டர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசன்ன விநாயகருக்கு குடும்பி தேங்காய் மாலை, வெற்றிவேர் மாலை சார்த்தி பிரார்த்தனை செய்தால் கல்வி செல்வமும், நோயற்ற வாழ்வும், வழக்குகளில் வெற்றியும் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்த கோயிலில் வழிபடும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் சிறந்து விளங்கியதும், நோய், நொடிகள் தீர இவரை வணங்கியவர்களுக்கு குணமாகியதும், பாளை. பகுதிகளில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளும், ஆஸ்பதிரிகளையும் கூறலாம். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளை. இன்று நிறைய கல்வி நிறுவனங்களை கொண்டு சிறந்த மாணவர்களை உருவாக்குவதுடன் சாதனை படைத்து வருகிறது. மேலும் பாளை.யில் அமைந்துள்ள ஆஸ்பத்திரிகளுக்கு சுற்றுப்புற பகுதிகளில் இருந்து மக்கள் வந்து தங்கி குணமாகி செல்கின்றனர். இதற்கு காரணம் கன்னி மூலத்தில் அமைந்துள்ள பிரசன்ன விநாயகர் தான் என பக்தர்கள் கூறுகின்றனர். "கல்யாண முருகன்: இந்த கோயிலின் வடபகுதியில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தமிழகத்தில் எங்குமே இல்லாத பஞ்ச முக தட்சிணாமூர்த்தி அருள்பாலித்து வருகிறார். இங்கு கார்த்திகை வழிபாடு, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி வழிபாடு சிறப்பு வாய்ந்தது. இங்கு நடைபெறும் கந்த சஷ்டி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். கல்யாணம் ஆகாதவர்கள், தோஷம் நிறைந்தவர்கள் சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டால் விரைவில் தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் அதிக திருமணங்கள் நடக்கும் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்று. இதனால் இங்குள்ள சுப்பிரமணிய சுவாமியை "கல்யாண முருகன் என இப்பகுதி பக்தர்கள் அழைக்கின்றனர். இந்த கோயிலில் மறைந்த கிருபானந்த வாரியாரால் அருணகிரிநாதர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழம் பெருமை வாய்ந்த பிரசன்ன விநாயகர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 1976ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 36 ஆண்டுகளுக்கு பின்பு இந்த கோயிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நிறைந்து கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியுள்ளன. நாளை (5ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.