பதிவு செய்த நாள்
04
டிச
2021
04:12
திருப்பதி: மலைப்பாதை சேதமடைந்துள்ளதால், இணைப்பு சாலை வழியாக திருமலை - திருப்பதிக்கான போக்குவரத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு: திருமலையில் சமீபத்தில் பெய்த கன மழையால் இரண்டாவது மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டது. இது குறித்து ஐ.ஐ.டி., நிபுணர்கள் குழு ஆய்வு நடத்தி வருகிறது. நேற்று காலை ஆய்விற்கு தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, ஐ.ஐ.டி., நிபுணர்களுடன் கலந்துரையாடினார். இதன்பின் அவர் கூறியதாவது:திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப் பாதையில் நான்கு இடங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த பாதையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. முதலாவது மலைப் பாதையிலேயே பக்தர்கள் திருப்பதியில் இருந்து திருமலைக்கும், திருமலையில் இருந்து திருப்பதிக்கும் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் திருமலைக்கு செல்லவும், திருப்பதிக்கு வரவும் மூன்று மணிநேரம் தேவைப்படுகிறது. பக்தர்களும் பெருமளவில் சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. பக்தர்களின் சிரமத்தை குறைக்க, திருமலையில் உள்ள இணைப்பு சாலை வழியாக போக்குவரத்தை துவக்கினால் சிரமம் சற்று குறையும்.
இரண்டாவது மலை: அலிபிரியிலிருந்து இரண்டாவது மலைப் பாதை வழியாக வாகனங்களை அனுமதித்து, இணைப்பு சாலை வழியாக முதல் மலைப் பாதை மூலம் திருமலைக்கு செல்லும் வகையில் போக்குவரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப் பாதையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, ஐ.ஐ.டி., நிபுணர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.