பதிவு செய்த நாள்
07
டிச
2021
04:12
பழநி : பழநி மலைக்கோயில் கிரி வீதி, சன்னதி வீதி, பூங்கா ரோடு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அதிகரித்து உள்ளது.பழநி மலைக்கோயிலுக்கு வெளிமாவட்ட, மாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் அடிவாரம் கிரி வீதி, சன்னதி வீதி பகுதிகளில் கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் வீதிகளை ஆக்கிரமித்துள்ளன.வின்ச் ஸ்டேஷன், பாத விநாயகர் கோயில் பகுதிகள் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. பேன்சி, அல்வா, துணி, பூஜை பொருட்கள், பொம்மைகள், சிற்றுண்டி என ஏராளமான தள்ளுவண்டி கடைகளை அமைத்துள்ளனர். பூங்கா ரோட்டில் வெளியூர் பக்தர்களின் வேன், பஸ் உட்பட வானங்கள் ஆக்கிரமித்துள்ளன. கிரி வீதியின் நடுவில் வெளிமாநில வியாபாரிகள் தரையில் அமர்ந்து தட்டுகளில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதனால் பக்தர்கள் சுற்றுலா வாகன நிலையத்திலிருந்து படிப்பாதை, வின்ச் ஸ்டேஷன் பகுதிக்கு வரவும், கிரிவலம் வரவும் சிரமம் அடைகின்றனர். மேலும் சில வியாபாரிகள் பக்தர்களை வலுக்கட்டாயமாக வழிமறித்து பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட விலை இல்லாததால் பக்தர்கள் வீதியில் நின்று பேரம் பேசி வாங்குகின்றனர்.இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கிறது. வீதிகளில் பக்தர் களின் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ, குதிரைவண்டி உள்ளிட்டவை வருவதால் மேலும் இடையூறு ஏற்படுகிறது. இங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி கண்துடைப்பாகவே உள்ளது. கிரிவீதி, சன்னதி வீதிகளில் பக்தர்கள் இடையூறின்றி சென்றுவர அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யம் இன்றி அகற்ற வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.