சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே விவசாயம் செழிக்க வேண்டி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இவ்வொன்றியத்தில் எஸ்.மாம்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, ஒப்பிலான்பட்டி கிராமங்களில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 3வது செவ்வாய்க்கிழமை அன்று விவசாயம் செழிக்கவும் கால்நடைகள் பெருகவும் ஊர் நன்மைக்காகவும் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். இன்று இக்கிராமங்களில் செவ்வாய் பொங்கல் வழிபாடு நடந்தது. அந்தந்த கிராம கோயில் மந்தையில் தென்னம்பாலையில் மனைகோலி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மந்தை முன்பாக பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கிடா வெட்டி அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்டது. பலி கொடுக்கப்பட்ட ஆட்டுக்கிடா இறைச்சி அனைத்து குடும்பங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.