பதிவு செய்த நாள்
16
டிச
2021
06:12
தொண்டாமுத்துார் : மார்கழி மாதத்தில், வீட்டின் முன் கோலம் போடுவதால், வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மை கொண்டு கிடைக்கும் என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
மார்கழி மாதத்தில், வீட்டின் முன் கோலம் போடுவது எதற்காக என்பது குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியதாவது: கோலம் என்பது அலங்காரத்துக்காக போடப்படுவதில்லை. இது ஒருவித வடிவம். சரியான முறையில் உருவங்கள் ஒன்றிணைந்தால் அது யந்திரம். நமது கலாச்சாரத்தை பொறுத்தவரை, கோலத்தையும் ஒரு குறிப்பிட்ட வகையான யந்திரமாகத்தான் உருவாக்கினர். மார்கழி மாதத்தில், சூரியன் தட்சிணாயணத்தில் இருந்து உத்தராயணத்துக்கு நகரும் நிகழ்வு நடக்கிறது. சூரியனின் ஓட்டத்தில் இந்த மாற்றம் நிகழும்போது, பூமியினுடைய சக்தி சூழ்நிலையிலும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமத்திய ரேகையிலிருந்து, 32 டிகிரி அட்சரேகையில் பெரிய மாற்றங்கள் நடக்கின்றன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த பரப்பில்தான் உள்ளன.தேவையான அறிவு, விஞ்ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பிட்ட விதத்தில் கோலம் இடுவதால் அந்த சக்தியை நம் வீட்டிற்குள் கிரகித்துக்கொள்ள முடியும். இதை நீங்கள் விஞ்ஞானப்பூர்வமாக செய்தால், உங்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.