கோயில் தெப்பக்குளங்கள் புனரமைப்பு; உயர்நீதிமன்றம் அவகாசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2021 06:12
மதுரை : கோயில்களுக்குச் சொந்தமான தெப்பக்குளங்களை புனரமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 2 மாதம் அவகாசம் அளித்தது.ஹிந்து தர்ம பரிஷத் மேலாண்மை அறங்காவலர் ரமேஷ் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான தெப்பக்குளங்கள் மாசடைந்துள்ளன. முறையாக அறநிலையத்துறை பராமரிக்கவில்லை.கோயில் தெப்பக்குளங்களை புனிதமாகக் கருதி மதுரை, திருக்கோஷ்டியூர் உட்பட பல கோயில்களில் தெப்பத்திருவிழா நடக்கிறது.அனைத்து ஹிந்து கோயில்களிலும் உள்ள தெப்பக்குளங்களில் கழிவு நீர் கலப்பது, குப்பைகளை குவிப்பதை தடுக்க வேண்டும்.
மாசுபடுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். தெப்பக்குளங்களை புனரமைத்து, பராமரிக்க தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையில் நீதிபதிகள், கோயில்களின் தெப்பக்குளங்களை துாய்மைப்படுத்த, ஆக்கிரமிப்புகளை அகற்ற, ஆழப்படுத்த, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு வழிகாட்டுதல் பிறப்பித்துள்ளது. இதில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, பி.வேல்முருகன் அமர்வு நேற்று விசாரித்தது.அறநிலையத்துறை தரப்பு: அறநிலையத்துறையின் கீழ் 1586 கோயில்களுக்குச் சொந்தமாக 2359 தெப்பக்குளங்கள் உள்ளன. இவற்றில் 1291 குளங்கள் நல்ல நிலையில் உள்ளன. 1068 குளங்களைப் பொருத்தவரை தண்ணீர் நிரம்பியபோதிலும் படிக்கட்டுகள், மதிற்சுவர்கள் சிதிலமடைந்திருந்தன. இவற்றில் 911 குளங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. 37 குளங்களில் திருப்பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சீரமைக்க வேண்டிய குளங்களை சரி செய்ய சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அறிக்கை தாக்கல் செய்தது. மேலும் 2 மாதங்கள் அவகாசம் கோரப்பட்டது. இதை அனுமதித்த நீதிபதிகள் 2 மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.