பதிவு செய்த நாள்
17
டிச
2021
11:12
பெ.நா.பாளையம்: துடியலூர், கவுண்டம்பாளையம், சின்னதடாகம், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சைவ, வைணவ கோவில்களில் மார்கழி மாத முதல் நாளையொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், புதுப்புதூரில் உள்ள ஆதி மூர்த்தி பெருமாள் கோவில், பாலமலை ரங்கநாதர் கோவில், நாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோவில், வீரபாண்டி லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி நரசிங்கப் பெருமாள் கோவில், இடிகரை பள்ளிகொண்ட ரங்கநாதர் சுவாமி கோவில், தடாகம் புதூர் சக்தி சித்த செல்வ விநாயகர் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பாவை, திருவம்பாவை ஆகியவற்றை பக்தர்கள் பாடினர். நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள அப்புலுபாளையம் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் திருக்கோயிலில், மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருப்பாவை சேவித்தல், சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தடாகம்புதூர் சக்தி சித்த செல்வ விநாயகர் கோவிலில் சுப்ரபாதம் மற்றும் பஜனையுடன் திருவீதி உலா நடந்தது. காலை, 6:30 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.