பதிவு செய்த நாள்
17
டிச
2021
12:12
அவிநாசி: உயர்வு, தாழ்வு இருந்தாலும், சகிப்புத்தன்மையுடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என, திருச்சி கல்யாணராமன் பேசினார். ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அவிநாசி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், வில்லி பாரத தொடர் சொற்பொழிவு, ஸ்ரீவியாஸராஜர் ராமநாம பஜனை மடத்தில் நேற்று மாலை, துவங்கியது. சொற்பொழிவாளர் திருச்சி கல்யாண ராமன், வில்லிபாரத வாழ்க்கை சூழலுடன் ஒப்பிட்டு பேசினார்.
அவர் பேசியதாவது: எல்லாரும் சமம் என்பதெல்லாம் கிடையாது; உயர்வு, தாழ்வு என்பதும் இருக்கும். ஆனால், சகிப்பு தன்மையுடன் வாழ வேண்டும். இதைத்தான் வில்லிபாரகம் சொல்கிறது. பாரதம் கேட்டவனை பகைத்துக் கொள்ளக்கூடாது என்பர்கள். அண்ணன், தம்பி உறவு மேம்பட, மகாபாரதம் படிக்க வேண்டும். முந்தைய ஆண்டுகளில், மார்கழி மாதத்தில் இதுபோன்ற சொற்பொழிவுகள் பல இடங்களில் நடக்கும்; ஆனால், தற்போது அத்தகைய திலை இல்லை. அனைத்து இடங்களில் உள்ள கோவில்களிலும் மண்ட பங்கள் உள்ளன; அங்கெல்லாம். இதுபோன்ற தொடர் சொற்பொழிவு நடத்தப்பட வேண்டும். மகாபாரதம், பாகவதம் போன்றவற்றை காதுகளில் கேட்க, கேட்க தான் அவற்றை படிக்க தோன்றும்; மனம் பண்படும். அரண்மனையில் வாழ்ந்தாலும், குடிசையில் வாழ்ந்தாலும், கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது; கஷ்டம் வந்தால் தான், கடவுளை நினைக்கின்றனர். பணமும், உடலில் தெம்பும் இருந்தால் தான், கஷ்டம் இல்லாமல் வாழ முடியும். எப்போது உயிர் பிரியும் என்ன சொல்ல முடியாது. எமன் எப்படி வருவான் என்றே கணிக்க முடியாது. எனவே, பகவான் நாமம் சொல்ல வேண்டும். ராணுவ வீரர்களுக்கு நற்கதி பாரதம், பாகவத சொற்பொழிவு நடக்கும் இடத்தில் இருந்து, நான்கு புறமும், 200 கி.மீ. சுற்றளவுக்கு அதன் பலன் போய் சேரும். அந்த வகையில், குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் வீர மரணமடைந்த முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்ட, 14 வீரர்களுக்கும் நற்கதி கிடைக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.