திருப்புத்தூர்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆடல்வல்லான் சன்னதியில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
தென் சிதம்பரம் என்று அழைக்கப்படும் திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் இறைவன் இறைவிக்கு கெளரி தாண்டவம் ஆடிய புராணச் சிறப்பு மிக்கது. இங்கும் சிதம்பரம் கோயிலில் போன்று திருஆருத்ரா தரிசன வைபவம் நடைபெறும். உற்ஸவர் நடராஜருக்கு அபிேஷகம், மாணிக்கவாசகர் புறப்பாடு, மூலவர் நடராஜர் சன்னதியில் எழுந்தருளி மாணிக்கவாசகர் 21 திருவாசக பாடல்கள் பாடுதலும், மாணிக்கவாசகருக்கு வெற்றிலைப் பெட்டி காணிக்கை, சிறப்பு தீபாராதனையும், மாணிக்கவாசகர் திருவீதி புறப்பாடும் நடைபெறும். கொரோனா விதிகளால் உற்ஸவர் எழுந்தருளல், மாணிக்கவாசகர் புறப்பாடு நடைபெறவில்லை, அதிகாலை 5:30 மணி அளவில் மூலவர் நடராஜர், சிவகாமி அம்பாள், நந்தி தேவர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து திருவாசகம் பாடப்பெற்று அலங்கார தீபாராதனை நடந்தது.