உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம்: புதிய சந்தனக்காப்பில் மரகத நடராஜர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2021 12:12
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கையில் நடந்த ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு மரகத நடராஜருக்கு புதிய சந்தனகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பும் பெற்ற சிவாலயமாகும். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா தரிசன விழா டிச.,11 இல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அபூர்வ பச்சை மரகத நடராஜருக்கு தனி சன்னதி உண்டு. ஆருத்ரா தரிசன விழா நேற்று காலை 8 மணி அளவில் துவங்கியது. .சந்தனம் படி களையப்பட்ட மரகத நடராஜரின் தரிசனத்தை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்திருந்தனர். ஆருத்ரா மகா அபிஷேகம், விசேஷ தீபாராதனை நிறைவேற்றப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணியளவில் அருணோதய காலத்தில் பச்சை மரகத நடராஜருக்கு புதிய சந்தனக் காப்பு இடப்பட்டு சர்வ மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோயில் அருகில் உள்ள கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான், மாணிக்கவாசகர் எழுந்தருளினர். உற்ஸவ மூர்த்திகளின் உள் பிரகார வீதிஉலா நடந்தது. முற்பகலில் மரகத நடராஜருக்கு வேத மந்திரங்கள் முழங்க விசேஷ தீபாராதனை செய்யப்பட்டு நடை சாத்தப்பட்டது. வருடம் முழுவதும் சந்தனக் காப்பு இடப்பட்டு ஆருத்ரா தரிசன நாள் மட்டுமே சந்தனம் களையப்படும், அபூர்வ நிகழ்வு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.