பதிவு செய்த நாள்
20
டிச
2021
03:12
கோவை: கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சமுதாய நல்லிணக்கம் சார்பில், கன்யா பூஜை விழா, ராமநாதபுரம், எஸ்.என்.அரங்கில் நேற்று நடந்தது.நிகழ்ச்சிக்கு, விஷ்வ ஹிந்து பரிஷத் சமுதாய நல்லிணக்க மாநில அமைப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார்.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கன்யா பூஜையை நடத்தி வைத்து பேசியதாவது:கோவையில் கன்யா பூஜை நடப்பது இதுவே முதல் முறை. பெண் குழந்தைகள் பராசக்தியின் வடிவம். ஐந்து வயது முதல், 12 வயது வரை உள்ள பெண் குழந்தைகளை, பராசக்தியாக நினைத்து பூஜை செய்து வழிபடுவதுதான் கன்யா பூஜையாகும்.இந்த பூஜை, இந்துகளின் பாரம்பரியத்தில் காலம் காலமாக நடத்து வந்த பூஜைதான். இடையில் இதை பின்பற்றாமல் விட்டு விட்டனர். இனி எல்லா இடங்களிலும் கன்யா பூஜை நடத்தப்பட வேண்டும்.பல ஆண்டுகளுக்கு பிறகு, காசியில் விஸ்வநாதர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இருப்பதால், இந்துகளிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த எழுச்சி, இந்தியாவின் அனைத்து பகுதியிலும் ஏற்பட வேண்டும். அதற்கு இது போன்ற பூஜைகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஆனந்த வேதாஸ்ரமம் ஈஸ்வரன் குருஜி, விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் தங்கவேல், லட்சுமண நாராயணன், அமர்நாத் சிவலிங்கம், மாவட்ட தலைவர் சிவலிங்கம், செயலாளர் விஷ்ணுராஜா பொருளாளர் ஹரி ராமசாமி, அமைப்பாளர் ஸ்ரீனிவாசன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.