பதிவு செய்த நாள்
20
டிச
2021
04:12
மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அருள்பாலித்து வரும் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம், சங்கர நாராயணர் கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக சங்கரலிங்கம் சுவாமிக்கும், கோமதியம்மனுக்கும், சங்கர நாராயணருக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில், அருள்மிகு சங்கர லிங்கம் சுவாமி ஆருத்ரா தரிசன காட்சியாக நடராஜராக, சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இன்றைய பூஜை இறைப் பணியில் சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பக்தர்களுக்கு சர்க்கரைப் பொங்கல், அபிஷேக பால், பஞ்சாமிர்தம், திருவாதரை களி பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ், சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.