பதிவு செய்த நாள்
21
டிச
2021
11:12
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் ஒன்றியம் இரும்பேட்டில், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுடன் கூடிய விநாயகி உள்ளிட்ட சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டம் இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த எழில் முருகன் என்பவர் அளித்த தகவல் அடிப்படையில், தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, தமிழ் கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜனுடன் சென்று ஆய்வு செய்தோம். அங்கு கல்வெட்டுடன் கூடிய பலகை கல்லில் மூன்று சிற்பங்கள் கிடைத்தன.
கல்வெட்டு வாசகம்: அதாவது, மேட்டுத்தெருவின் தெற்கு நீரோடை கரையில், விநாயகரின் பெண் உருவத்தில் அமைந்த விநாயகி சிற்பம் கிடைத்தது. அடுத்து அதே தெருவின்குளக்கரையில் ஒரு சிற்பம் கிடைத்தது. அதை ஊர் மக்கள், துர்க்கை அம்மனாக வழிபடுகின்றனர். ஆனால், கையில் கத்தி, சங்குடன் தாமரையில் அமர்ந்த நிலையில் உள்ள சிற்பத்தின் கூறுகள் ஆணின் தன்மைகளைக் கொண்டுள்ளன. இது கார்த்திகேயன் அல்லது விஷ்ணுவாக இருக்கலாம்.
விநாயகி சிலை அருகே, சமகால எழுத்துடன் கூடிய லகுலீசர் சிற்பம் ஒன்றும் கிடைத்தது. தமிழகத்தில் பரவலாக கல்வெட்டுகள் தனியாகவும், சிற்பங்கள் தனியாகவும் கிடைக்கும் நிலையில், இங்கு சிற்பத்தின்கீழ் எழுத்து பொறிக்கப்பட்டிருப்பது, சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த எழுத்து மற்றும் சிற்ப அமைப்பின்படி, இவை, 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கலாம். இதில், செயம் பட்ட முத்திர வரிகன் மடவதி என்ற கல்வெட்டு வாசகம், மூன்று சிற்பங்களிலும் காணப்படுகிறது.
தொடர் ஆய்வு: அதாவது இவ்வூரைச் சேர்ந்த முத்திர வரிகன் மடவதி என்பவர், தான் பெற்ற வெற்றியின் நினைவாக இச்சிலைகளை செய்து கொடுத்திருக்கலாம்.விநாயகரின் பெண் வடிவங்களை வட மாநிலங்களில் அதிகமாக வழிபடும் நிலையில், தமிழகத்தில் காலத்தால் முந்தைய விநாயகி சிலை கிடைத்திருப்பது ஆய்வுக்குரியது. மேலும், அதே பகுதியில் கிடைத்த லிங்கம், ஊராரின் வழிபாட்டில் உள்ளதால், பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிவன் கோவில் அப்பகுதியில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. தொடர் ஆய்வுகளின் வழியே, அதற்கான விடை கிடைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.