திருவாரூர் : ஞானபுரீ ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் வரும் 25ம் தேதி கிருஷ்ணாநந்த தீர்த்த மஹா சுவாமிகளின் ஜெயந்தி விழா நடக்கிறது.
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குரு ஸ்தலத்திற்கு அருகே திருவோணமங்கலம் கிராமத்தில் ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரம் சங்கடகர மங்கல மாருதி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் 33 அடி உயரம் விஸ்வரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் வரும் 25ம் தேதி ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் வித்யா பீடம் வித்யாபினவ கிருஷ்ணாநந்த தீர்த்த சுவாமிகளின் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.அதனை முன்னிட்டு கடந்த 12ம் தேதி முதல் மஹா சுவாமிகள் ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ளார். வரும் 25ம் தேதி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகிறது.
தொடர்ந்து மஹா சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். அனுமன் ஜெயந்தி:ஞானபுரீ சித்திரகூட ஷேத்திரம் சங்கடஹர மங்கல மாருதி கோவிலில் மார்கழி மாத அமாவாசை மூல நட்சத்திரம் கூடிய ஜனவரி 2ம் தேதி அனுமன் ஜெயந்தி மகோத்சவம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று 20ம் தேதி முதல் துவங்கிய சத சண்டி யாகம் வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை ருத்ர ஹோமம் நடைபெறுகிறது. ஜனவரி 2ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்று அருள் பெற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஜனவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் இக்கோவிலில் பூஜிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் பக்தர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் தர்ம அதிகாரி ரமணி அண்ணா, ஸ்ரீ காரியம் சந்திரமௌலீஸ்வரர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.