பதிவு செய்த நாள்
21
டிச
2021
12:12
புதுச்சேரி-அர்ப்பணிக்கும் பொருட்களை இறைவன் பார்ப்பதில்லை;மனதில் பக்தி உள்ளதா என்று தான் பார்க்கிறார் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் கூறினார்.
புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தையொட்டி, திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடக்கும் இந்த சொற்பொழிவில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் தினமும் காலை 7:00 மணி முதல், 8:30 மணி வரை உபன்யாசம் செய்து வருகிறார்.நேற்றைய ஐந்தாம் நாள் உபன்யாசத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் பேசியதாவது:திருப்பாவை ஐந்தாம் பாசுரத்தில் எளிமை, பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற இறைவனின் ஐந்து நிலைகளில் ஐந்தாவதுதான அர்ச்சாவதாரம் குறித்து சொல்லப்படுகிறது. இறைவனை அடையும் வழிகள், அடைய வேண்டிய பொருள், அடைவதால் கிட்டும் பயன் ஆகியவற்றை ஆண்டாள் இந்த பாசுரத்தில் உள்ளுரை பொருளாக சொல்லி யுள்ளார்.இதேபோல் இப்பாசுரத்தில் துாமலர் என்று ஆண்டாள் அருளியுள்ளதை கவனிக்க வேண்டும். எல்லா மலர்களும் இறைவனுக்கு உகந்தவையாயினும், சில மலர்கள், சில காரணங்களுக்கு விசேஷம் உண்டு. அப்படிப்பட்ட மலர்களை கொண்டு இறைவனை அர்ச்சித்தால் விசேஷ உகப்பு அவருக்கு ஏற்படும்.சில மலர்கள் வாசனையால் விசேஷ மேன்மை பெற்றவை. மல்லிகை, மனோரஞ்சிதம் போன்ற மலர்கள் காந்தம், ரூபம் என்ற இரண்டு ஆகாரத்தாலும் மேன்மை பெற்றவை. இந்த மலர்களைவிட கருநெய்தல் மலர் சிறந்தது. கருநெய்தல் மலரைவிட தாமரை சிறந்தது. அந்த தாமரையில் நுாறு இதழ் தாமரை சிறந்தது.நுாறு இதழ் தாமரைவிட ஆயிரம் இதழ் தாமரை சிறந்தது. ஆயிரம் இதழ் தாமரைவிட வெண்தாமரை மேலானது. ஆயிரம் வெண்தாமரைவிட ஒரு துளசிதளம் மேலானது. துளசியைவிட கொக்கு மந்தாரை மேலானது. கொக்கு மந்தாரையைவிட சுவர்ண புஷ்பம் சிறந்தது. அதை பகவானுக்கு கொடுப்பது போன்று வேறொன்றும் கிடையாது.இந்த மலர்கள் கண்ணால் பார்க்கப்படும் புஷ்பங்கள். நாம் ஊனக் கண்ணால் காண முடியாத சாத்திரங்களை கொண்டே அறிய வேண்டிய புஷ்பங்கள் சில உண்டு. அவற்றில், அகிம்சை, சத்தியம், தியானம், தபஸ் உள்ளடக்கம். இந்த புஷ்பங்களை கொண்டு அர்ச்சித்தால் இறைவன் மிக மிக சந்தோஷமடைவார். இருப்பினும் இறைவன் நாம் அவனிடம் அர்ப்பணிக்கும் பொருட்களை பார்ப்பதில்லை; மனதில் பக்தி உள்ளதா என்று தான் பார்க்கிறார்.இவ்வாறு, ராமபத்ரன் பேசினார்.