பதிவு செய்த நாள்
18
டிச
2021
01:12
அவிநாசி: "நமது பெருமை, புகழை, பிறர் கொண்டாடும் படி வாழ்வது தான், உண்மையில் புகழுக்குரியது" என, திருச்சி கல்யாணராமன் பேசினார். ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அவிநாசி, ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்த பேரவை சார்பில், வில்லிபாரத தொடர் சொற்பொழிவு. ஸ்ரீவியாஸராஜர் ராமநாம பஜனை மடத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை, சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன், புராண கதைகளுடன் வாழ்வியல் சூழலை விளக்கினார்.
அவர் பேசியதாவது: பதவி ஆசை என்பது, புராண காலத்தில் இருந்து இன்று வரை இருக்கிறது. எத்தனை உயர்ந்த பதவியில் இருந்தாலும், பணிவுடன் இருக்க வேண்டும். உயர் பதவியில் இருக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இதற்கு, ராமாயணம் மிகச்சிறந்து உதாரணம். சக ஊழியர்களிடம் அன்னியோன்யாக இருக்க வேண்டும். பணம், பதவி வரும் போது, பணிவும் வர வேண்டும். உயர்ந்த நிலையில் இருந்தாலும், எளிமையாக, சாதரணமாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும். வசதி, வாய்ப்பு வரும்போது தன்னடக்கம் வர வேண்டும்; இவையெல்லாம் புராண காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளன.
முதல் சத்ரு, கோபம் தான். எனவே, கோபத்தை விட்டொழிக்க வேண்டும். மனதில் சபலம் வந்தால் பலம் போய்விடும். தமது மனம் தான் நமக்கு காவலாக இருக்க வேண்டும். புகழ், பெருமை என்பது, நமக்கு நாமே தேடிக் கொள்வதல்ல. மாறாக, நமது பெருமை, புகழை மற்றவர்கள் கொண்டாட வேண்டும்; பிறர் கொண்டாடும் படி வாழ வேண்டும். நம்மை விட அறிவாளிகள் இவ்வுலகத்தில் உள்ளனர் என்ற மனநிலையை, எப்போதும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புராணங்கள், இதிகாசங்களை படிக்க வேண்டும். வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களும் அதில் உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.