பதிவு செய்த நாள்
22
டிச
2021
02:12
பொள்ளாச்சி:அதிகாலை நேரத்தில் வீதிகளில் குழுவாக இணைந்து, பஜனை பாடல்களை பாடிச் செல்வதால் உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறுகிறது, என, பஜனை குழுவினர் தெரிவித்தனர்.தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம், தனுர் மாதம் என அழைக்கப்படும் மார்கழி மாதமாகும். இந்த மாதத்தில், அதிகாலை எழுந்து, இறைவழிபாடு செய்வது வழக்கம். இந்த மாதத்தில், பெண்கள் அதிகாலை நேரம் எழுந்து கோலமிடுவது, பஜனை பாடல்களை பாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அறிவியலும், ஆன்மிகமும் கலந்துள்ள இந்த மார்கழி வழிபாடுடன் கூடிய பஜனை பாடிச் செல்வதால், புத்துணர்வு கிடைக்கிறது என்கின்றனர் பஜனை குழுவினர்.பொள்ளாச்சி ஜோதிநகர் பஜனை குழுவினர், மார்கழி முதல் நாளில் இருந்து ஜோதிநகர் விநாயகர் கோவில் முன் துவங்கி, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி முக்கிய வீதிகள் வழியாக சென்று வருகின்றனர்.பஜனை குழுவினர் கூறியதாவது:மாதங்களில் நான் மார்கழி என கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். பலர் ஒன்றாக சேர்ந்து பக்தி பாடல்களை பாடும் ஒரு வழிபாட்டு முறையே பஜனை. பஜனை என்பது பகிர்வு என பொருள்படும்; 12 ஆழ்வார்களில் ஒருத்தியான ஆண்டாள், தன் தோழிகளுடன் மார்கழி மாதத்தில் இறைவனையே கணவனாக அடைய திருப்பாவை நோன்பு இருந்தாள்.இம்மாதத்தில் பகவானின் நாம பஜனையை பக்தியுடன் பாடுவது மூதாதையர் காலம் முதல் இருந்து வருகிறது. கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம், பஜனை ஒன்றே இறைவனிடம் பக்தி செலுத்தும் வழியாகும். அதிகாலை நாம பஜனை செய்வதில், ஆன்மிகத்துடன், அறிவியல் பலன்களும் நிறைந்துள்ளது. அதிகாலை நேரத்தில், உடலுக்கு ஆக்சிஜன் நல்ல முறையில் கிடைக்கிறது. நடையுடன் கூடிய பஜனை ஆதலால், அதிகாலை நடைபயிற்சியாகிறது. அதனால், உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறுகிறது.ஜோதிநகர் பஜனை குழு ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் காலை, 6:15 மணிக்கு ஜோதிநகர் விநாயகர் கோவிலில் துவங்கி பஜனை பாடல்களை பாடி வீதி வலம் வருவது தொடர்கிறது.இறுதியில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவு பெறும். இவ்வாறு, தெரிவித்தனர்.