பதிவு செய்த நாள்
23
டிச
2021
12:12
புதுச்சேரி: எங்கும் பொழியும் மழை நீர் சமுத்திரத்தை சென்றடைவது போல், எந்த தேவதைக்கும் செய்யும் நமஸ்காரங்களும் கேசவனாகிய விஷ்ணுவையே சென்றடையும், என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் கூறினார்.மார்கழி மாதத்தை முன்னிட்டு, புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு கடந்த 16ம் தேதி துவங்கியது. வரும் ஜனவரி 12ம் தேதி வரை நடக்கும் சொற்பொழிவில், தினமும் காலை 7:00 மணி முதல், 8:30 மணி வரை, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்கிறார்.நேற்றைய ஏழாம் நாள் உபன்யாசத்தில் ராமபத்ரன் பேசியதாவது:திருப்பாவை ஏழாம் பாசுரத்தில் ஆண்டாள் மாலவனுக்கு சூட்டும் பாமாலை தேஜோ மாலை எனலாம். இது, ஆழ்வார்களை துயில் எழுப்புவதற்காக பாடப்பட்ட 10 பாசுரங்களில் இரண்டாம் பாசுரம். இந்த பாசுரத்தில் குலசேகர ஆழ்வாரை துயில் எழுப்பியுள்ளார். எம்பெருமானின் பன்னிரண்டு திருநாமங்களில் முதல் இரண்டு திருநாமங்கள் கேசவன், நாராயணன் என்பதாகும். அப்படி இருக்கும்போது நாராயணன் மூர்த்தி கேசவனை பாடவும் என்று முதல் திருநாமங்களை சொல்லி ஆண்டாள் இந்த பாசுரத்தை அருளியுள்ளார்.இந்த பாசுரத்தில் வரும் நாராயணன் என்ற திருநாமம் திருப்பாவையில் 3 பாசுரங்களிலும், கேசவன் என்ற திருநாமம் 2 பாசுரங்களிலும் ஆண்டாள் நாச்சியார் பாடியுள்ளார். பக்தி என்ற மத்தினால், பகவத் அனுபவம் என்ற தயிரை கடைந்தால், எம்பெருமானை அறியும் ஞானம் என்ற வெண்ணெய் திரண்டு வரும். அந்த ஞானமே உஜ்ஜீவனம். இதை தான் ஆண்டாள் இந்த பாசுரத்தில் உள்ளுரை பொருளாக உணர்த்துகிறாள்.ஒரு மாலையின் நடுவில் இருக்கும் கல், நாயகக் கல் என்றழைக்கப்படும். குரு பரம்பரை என்ற மாலையின் நடுநாயகமாக ஜொலிப்பவர் ராமானுஜர். அதுபோன்றே ஆழ்வார்கள் வரிசையில் நடுநாயகமாக திகழ்பவர் குலசேகர பெருமாள். மாலையின் ஒருபுறம் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார் என்ற ஐவரும், மறுபுறம் பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப்பொடி, திருப்பாணர், திருமங்கை ஆழ்வார் ஆகிய ஐவர். நடுவில் குலசேகர ஆழ்வார்.இந்த பாசுரத்தில் பிரம்மனையும், சிவனையுயும் பாடி துதித்துள்ளார். பிரம்மனையும், சிவனையும் தம் மேனியில் வைத்திருப்பவர் கேசவன். இதை தான் வேதத்தில் எங்கும் பொழியும் மழை நீர் சமுத்திரத்தை அடைவது போல், எந்த தேவதைக்கும் செய்யும் நமஸ்காரங்களும் கேசவனாகிய விஷ்ணுவையே சென்றடையும்.இவ்வாறு ராமபத்ரன் பேசினார்.