பதிவு செய்த நாள்
22
டிச
2021
05:12
அவிநாசி: சேவூரில், உயிருடன் நவகண்டம் கொடுத்து சித்தர் முத்துக்குமாரசுவாமி ஜீவசமாதி அடைந்தார். ஆண்டுதோறும் ஜீவசமாதி அடைந்த நாளான புனர்பூச நட்சத்திரத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ,17 ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து சேவூர் பத்ரகாளியம்மன் கோவிலில் அமைத்துள்ள முத்துக்குமாரசுவாமிக்கு, முசாபரி தோட்டத்தில் அமைத்துள்ள அவரது ஜீவசமாதியிலும் காலை, மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை, 7:00 மணிக்கு திருக்கோவிலில் பொங்கல் வைத்தல், காலை, 9:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், அதை தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் உட்பட திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றது. மதியம் மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பகல், 3:00 மணிக்கு அவரது ஜீவ சமாதியில் பக்தர்கள் அலகு குத்தி திருவீதி உலா நடைபெற்றது.