சபரிமலையில் படி பூஜை நிறுத்தம்: ஜன.15க்குப்பின் மீண்டும் நடக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2021 10:12
சபரிமலை: கொரோனா காரணமாக மண்டல காலசீசன் துவக்கத்தில் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தற்போது நீக்கப்பட்டு சபரிமலைக்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் காலை மற்றும் மாலையில் தரிசனத்துக்கு நீண்ட வரிசை காணப்படுகிறது. 18 படிகள் ஏறி மேம்பாலத்தில் நீண்டநேரம் காத்து நின்ற பின்னரே பக்தர்களுக்கு தரிசனம் கிடைக்கிறது. உதயாஸ்தமன பூஜை நடக்கும் போது ஸ்ரீ கோயில் முன்புறமுள்ள வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் சிரமப்படுகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று முதல் உதயாஸ்தமன பூஜை நிறுத்தப்பட்டது. இனி மாத பூஜையின் போது மட்டுமே இந்த பூஜை நடத்தப்படும். கடந்த காலங்களில் இல்லாத ஒரு நிகழ்வாக தற்போது மண்டல சீசனில் கார்த்திகை1 முதல் எல்லா நாட்களும் படி பூஜை நடைபெற்று வந்தது. இந்தப்பூஜை தீபாராதனைக்குப்பின் ஒன்றரை மணி நேரம் நடக்கும். இந்த நேரத்தில் பக்தர்கள் படி ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தற்போது கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ஏற்படும் சிரமத்தை கருத்தில் வைத்து நாளை மறுநாளுடன் படி பூஜை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனி மகரஜோதி தரிசனம் முடிந்து ஜன.15க்குப்பின்னே படி பூஜை நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.