மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் பெருவழி பாதையில் பயணிக்கலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21டிச 2021 04:12
சபரிமலை: மகரவிளக்கு காலத்தில் பக்தர்கள் பெரு வழிப்பாதையில் பயணம் செய்வதற்காக பத்தனம்திட்டா கலெக்டர் தலைமையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக எருமேலியிலிருந்து பம்பை வரும் பெருவழி நடைபாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். தற்போது அரசு இந்தப் பாதையில் பயணிக்க அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தப் பாதையை ஆய்வு செய்யும் பணியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பாதை எருமேலியிலிருந்து அழுதை, கரிமலை, பெரியானை வட்டம் வழியாக பம்பைக்கு 61 கி.மீ. தூரம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பாதை பயன்படுத்தப்படாமல் உள்ளது. ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்து கிடக்கிறது. தொடர்ச்சியாக ஆள் அரவம் இல்லாததால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் அதிகாரிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா ஐயர் தலைமையில் இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தப் பகுதியில் உள்ள மக்களையும் இணைத்து பாதையை விரைவாக சரிசெய்ய முடிவு செய்யப்பட்டது. எட்டு இடங்களில் பக்தர்கள் ஓய்வெடுக்க இடம், இரண்டு இதயநோய் மருத்துவமனைகள், மூன்று அவசர சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும். வனத்துறையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கமிட்டியின் கடைகள் ஆங்காங்கே தொடங்கப்படும். ஐயப்பா சேவா சங்கம் மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கும்.
காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க இரண்டு கிலோ மீட்டர் வீதம் இடைவெளியில் கண்காணிப்பு கருவிகளுடன் கூடிய மையங்கள் அமைக்கப்படும். வரும் 26ம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை அடைத்த பின்னர் 30-ம் தேதி மகரவிளக்கு கால பூஜைகளுக்காக நடைதிறக்கும் போது இந்தப் பாதை வழியாக பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.