சபரிமலையில் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம்; 430 கோடி ரூபாய். வருமானம் கடந்த ஆண்டை அதிகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2026 01:01
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் கூறினார்.
சன்னிதானத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சபரிமலை உள்ளிட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டு கோயில்களில் ரசீதுகள் கார்பன் பேப்பர் வைத்து எழுதுவது தவிர்க்கப்பட்டு முழுக்க முழுக்க கம்ப்யூட்டர் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குள் அது செயலுக்கு வரும். சபரிமலையில் நடைபெற்ற நெய் மோசடி தொடர்பாக சுஜித் குமார் போத்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயத்தில் விரிவான விசாரணை நடத்தப்படும்.
இந்த சீசன் முடிந்தவுடன் அடுத்த சீசனுக்கான ஆயத்த பணிகள் தொடங்கும். பிப்., 6-ம் தேதி திருவனந்தபுரத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். அதற்கு முன்பு துறைவாரியாக ஆலோசனைகள் கேட்கப்படும். ஒரு மாறுபட்ட சூழ்நிலையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்த போர்டு பொறுப்பேற்றது. மக்கள் எங்களிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதை நிறைவேற்ற இந்த போர்டு முயற்சி செய்யும். ஸ்பான்சர் என்ற பெயரில் வருபவர்களை எல்லாம் சிவப்பு கம்பளம் வைத்து வரவேற்கும் செயல் இனி சபரிமலையில்இருக்காது. அவர்களாக ஸ்பான்சர் செய்ய வருவதையும் ஏற்க முடியாது. போர்டு தேவைப்பட்டால் ஸ்பான்ஸர்களை தேடும் போது அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களது வங்கி கணக்கு விபரங்கள் வருமான வரி கணக்குகள் போன்றவை ஆய்வு செய்யப்பட்ட பின்னரே அவரிடம் இருந்து ஸ்பான்சர் பெறுவது பற்றி முடிவு எடுக்கப்படும்.
பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள அனைத்து திருவாபுரணங்களும், விலை மதிப்புள்ள பொருட்களும் ஆய்வு செய்யப்பட்டு அதன் பழமை நிர்ணயம் செய்யப்பட்டு பதிவு புத்தகம் தயாரிக்கப்படும். எரிமேலியில் இடப்பற்றாக்குறை உள்ளது. அங்கு பக்தர்கள் சிரமப்படுகின்றனர் என்பது தெரிகிறது. மாஸ்டர் பிளானிலும் எரிமேலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது பற்றி ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும். நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். 430 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் அரவணை விற்பனை மூலம் மட்டும் 190 கோடி ரூபாயும், காணிக்கையாக 110 கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. எல்லா வகையிலும் கடந்த ஆண்டை விட அதிக வருமானம் வந்துள்ளது. 2026 மண்டல மகர விளக்கு சீசன் தொடங்கும் போது சபரிமலையில் மிகப்பெரிய மாற்றங்கள் வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குறிப்பாக பக்தர்கள் இலவசமாக தங்குவதற்கு கூடுதல் ஷெட்டுகள் அமைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.