பதிவு செய்த நாள்
23
டிச
2021
04:12
கோத்தகிரி: கோத்தகிரி பேரகணி மடிமனையில் நடந்த ஹெத்தையம்மன் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்களின் குலதெய்வமான ஹெத்தையம்மன் திருவிழா, 20 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. செங்கோல் பக்தர்கள், கிராம கோவிலில் இருந்து, அம்மனை அழைத்துச் சென்று, மடிமனையில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவ்விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, பொரங்காடு சீமைக்கு உட்பட்ட, பேரகணி மடிமனையில் நேற்று, கோலாகலமாக திருவிழா நடந்தது. காலை முதல் அம்மன் அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்தது. பகல், 2:00 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவை ஒட்டி, நீலகிரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், கலாச்சார உடையுடன் பங்கேற்று, அம்மனுக்கு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். விழாவின் தொடர்ச்சியாக, நாளை (வெள்ளி) காத்துகுளி மடிமனையிலும், சனிக்கிழமை ஒன்னதலை மடிமனையிலும் விழா நடக்கிறது.