பேரையூர் : பேரையூர் அருகே தேவன்குறிச்சி மலைப்பகுதியில் கற்காலத்தை சேர்ந்த குகை ஓவியம், கற்படுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை வரலாற்று துறை பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமணமூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர்கள் ஆனந்தகுமரன், நாகபாண்டி ஆகியோர் கொண்ட குழுவினர் தேவன்குறிச்சி மலைப்பகுதியில் மேற்பரப்பு ஆய்வு செய்தபோது புதிய கற்காலத்தைச் சேர்ந்த நீண்ட குகை வெண்சாந்து (வெள்ளை நிறம்) ஓவியம், கற்படுக்கைகள் போன்றவை கண்டறியப்பட்டது.
முனீஸ்வரன் கூறியதாவது: தென் தமிழகத்தில் இருந்து சேர நாட்டிற்கு முக்கிய வணிகப் பாதையாக இருந்தது டி.கல்லுப்பட்டி. இங்கு தேவன்குறிச்சி மலையின் உச்சிப் பகுதியில் நீண்ட வடிவம் உடைய 15 அடி நீளம், 4 அடி அகலம், கொண்ட நுழைவு வாயில் அமைப்பு கொண்டும், வாயின் உட்புறங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் அறிந்த நிலையிலும் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களும் கண்டறியப்பட்டன. தற்போது இக்குகை பொந்து பாறை என அழைக்கப்படுகிறது. பாறை ஓவியம் ஆதிகால மனிதர்கள் தங்களை அச்சுறுத்தும் காட்டு மிருகங்கள் தன் கண்ட காட்சிகளை சேர்ந்த மற்றும் வெண்சாந்து ஓவியங்கள் மற்றும் குறியீடுகள் பாறைகளில் வரைந்தனர். செஞ்சாந்து ஓவியம் காலத்தால் முற்பட்டது. வெண்சாந்து ஓவியம் என்பது வெப்பாழை என்ற மரத்திலிருந்து பால் எடுத்து இயற்கையாக கிடைக்கும் சுண்ணாம்பு கல் தோய்த்து சுண்ணாம்பு திரவமாக பிடித்து இரண்டையும் கலந்து தனது விரலின் மூலம் வெண்சாந்து ஓவியம் தீட்டினார்கள். கற்படுக்கை மலையின் தென்மேற்கு பகுதியில் 2 அடி அகலம் 5 அடி நீளம் கொண்ட மூன்று கற்படுக்கை நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கற்படுக்கை அருகே மழைநீர் வழிந்தோட குகைத்தளத்தில் வாயிலின் தரைத்தளத்தில் சிறிய வாய்க்கால் போன்று வெட்டப்பட்டு இருக்கிறது. குகையின் மேல் பகுதி சிதைந்து காணப்படுகிறது. சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இவை ஏதோ ஒரு காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது குகையினை பஞ்சு மெத்தை பாறை என்று அழைக்கப்படுகிறது.இவ்வகை பாறைகள் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, பெருமுக்கல் தண்டராம்பட்டு போன்ற இடங்களில் கண்டறியப்பட்டது. தேவன்குறிச்சி மலையில் கண்டறியப்பட்ட பாறைக்கீறல் வரலாற்றின் முக்கியமான மைல் கல்லாகும் என்றார்.