பக்தி சரணாகதியே பகவானை அடைய வழி:ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24டிச 2021 04:12
புதுச்சேரி-பக்தியின் பலனாய் செய்யும் சரணாகதியே பகவானை அடையும் எளிய வழி என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று 8ம் நாள் சொற்பொழிவில் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது;திருப்பாவை எட்டாம் பாசுரத்தில் நம்மாழ்வாரை துயிலெழுப்புகிறாள் ஆண்டாள். தற்போது நடப்பது கலியுகத்தின் 5122ம் ஆண்டு. நமது முன்னோர்கள் கலியுகத்தின் காலம் நான்கு லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள் என்று சொல்லியுள்ளதை கருத்தில் கொண்டால், நம்மாழ்வார் அவதரித்தது கலியுகத்தின் உதய காலம்.இதனால் தான் கீழ்வானம் வெள்ளென்று என்று எட்டாம் பாசுரத்தில் ஆண்டாள் சொல்லியுள்ளார். நம்மாழ்வார் ஞான சூரியனாக இவ்வுலகில் அவதரித்து அஞ்ஞான இருளை போக்கினார் என்று கொண்டு இந்த பாசுரம் நம்மாழ்வாரை துயிலெழுப்புவதாக கொள்ளலாம். வேறொரு விதமாக கீழ்வானம் வெள்ளென்று என்பதை வேதாந்த விஷயமாகவும் அனுபவிக்கலாம். இந்த ப்ரகிருதி மண்டலத்தை கீழ்வானம் என்றும் பகவான் பரமபதம் உள்ள மேல்வானம் என்று மனதில் கொள்ளலாம்.அப்படியென்றால் ஆழ்வார்கள், ஆசார்யா புருஷர்களும் அவதரித்து நம் அஞ்ஞானத்தை போக்கி, எம்பெருமானை அறியும் ஞானத்தை உபதேசித்துள்ளத்தை வாயினால் பாடி, மனதில் சிந்தித்து உணர்ந்தால், இந்த வையகமே நித்ய விபூதியான வைகுண்டமாக மாறும் என்று ஆண்டாள் அருளியுள்ளதை உணரலாம். கர்மயோகம், ஞான யோகம், தந்த்ர யோகம் என்று பல வழிகளை நம்பி போகின்றவர்களை போகாமல் தடுத்து, பக்தியின் பலனாய் செய்யும் சரணாகதியே பகவானை அடையும் எளிய வழி என்ற உள்ளுரை பொருளும் பாசுரத்தில் இடம் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.