பதிவு செய்த நாள்
24
டிச
2021
04:12
சைதாப்பேட்டை-நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, காரணீஸ்வரர் கோவில் குள மீன்களை மீட்பதற்காக, முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில், 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் திருக்குளம் உள்ளது. இக்குளத்திற்கு நீர்வரத்திற்காக, மழை நீர் வடிகால் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் குளம் நிரம்பியது.
இந்நிலையில், கோவில் குளத்தில் கழிவுநீர் கலந்ததால், தண்ணீர் கருமை நிறமாக மாறி, மீன்கள் செத்து மிதந்தன.இது குறித்து நம் நாளிதழில் குளத்தில் மீன்கள் செத்து மிதக்கும் படம் வெளியானது. இதையடுத்து, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், நேற்று ஆய்வு செய்தனர்.பின், கோவில் குளத்தில் இணைக்கப்பட்டுள்ள மழை நீர் வடிகாலை, மணல் மூட்டைகளால் அடைத்தனர். மேலும் தண்ணீரில் ஆக்சிஜன் அளவை அதிகரித்து மீன்களை மீட்க, மின் மோட்டார் வாயிலாக புது தண்ணீர் நிரப்பப்பட்டது.இது குறித்து, கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:கோவில் குளத்தில் மழை நீர் சேகரிக்கவே, மழை நீர் வடிகால் இணைப்பு வழங்க மாநகராட்சிக்கு அனுமதி அளித்தோம்.ஆனால், தற்போது மழை நீருடன் கழிவுகள் கலந்து வருவதால், குளத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து, மீன்கள் செத்து மிதந்தன.இதையடுத்து, ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, குளத்தில் 1 அடி உயரத்திற்கு புது தண்ணீர் நிரப்பப்படுகிறது. மழை நீர் வடிகாலில் இருந்து வரும் கழிவு நீரை, மணல் மூட்டைகளால் அடைத்து தடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.