பதிவு செய்த நாள்
27
டிச
2021
01:12
புதுச்சேரி : வணங்கியவன், வணங்காதவன் என்ற தடையே இல்லாமல், அவரவர் விதிவகையின்படி இறைவனாகிய நாராயணனிடம் லயமாகி விடுவர் என, ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, கடந்த 16ம் தேதி திருப்பாவை சிறப்பு சொற்பொழிவு துவங்கியது.
ஜன., 12ம் தேதி வரை தினமும் காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவு ஆற்றுகிறார்.நேற்று 11ம் நாள் சொற்பொழிவில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:நீர் எதிலும் அடங்கி விடும். நீருக்குள்ளும் எதுவும் அடங்கி விடும். அதேபோல், புண்யாத்மா- பாபாத்மா என்ற பேதம் இன்றி, சாதி, மதம், இனம், பெண் என்று பேதமும் இல்லாமல், வணங்கியவன், வணங்காதவன் என்ற தடையே இல்லாமல் அவரவர் விதிப்படி இறைவனாகிய நாராயணனிடம் அனைவரும் லயமாகி விடுவர்.வினை பயனால், அது ஒரு பிறவியோ அல்லது ஓராயிரம் பிறவியோ இருக்கலாம்.
இறுதியில் லயமாவது நாராயணனிடம் தான்.பொதுவாக வேதிப்பொருட்கள் அனைத்தும் ஒரு நிலையில் இருந்து வேறு நிலைக்கு மாற வெப்பம், அழுத்தம், உடன் சேர்க்கப்படும் பொருட்கள் போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்து இருக்கும்.ஆனால், நீர் மட்டும் தான் திடப்பொருளாகவும், திரவமாகவும், காற்றாகவும் என எந்த வடிவத்திலும் நம்மால் பார்த்து உணர முடியும்.நீர் மட்டும் எளிதில் ஆவியாகும்; கட்டியாகும். மீண்டும் நீராகவும் மாறும். அதுபோன்றே எம்பெருமானும் அடியவர்களின் வெப்பத்திற்கு, அதாவது மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தன்னை எளிதாக மாற்றிக் கொள்வார்.அப்படி மாறினாலும், இறைவன் அவனாகவே இருப்பார். நீர் வடிவம் இல்லாதது. எந்த கொள்கலனில் சேர்க்கப்படுகிறதோ, அதற்கேற்ப வடிவம் பெறும். அது போன்றே நீர் வண்ணனாகிய நாராயணனும் எதில் கொள்ளப்படுகின்றானோ; ஊற்றப்படுகின்றானோ அந்த பாத்திரத்தின் வடிவத்தை பெறுவான்.குறிப்பாக, மீன்,
ஆமை, வராகம், வாமன், திரிவிக்ரமன், மனிதனாக அதாவது ராமன், பலராமன், பரசுராமன், கண்ணன் என்று ஏற்ற பாத்திரங்களை எதிர்கொண்டவன் நாராயணன்.கண்ணனை நினைக்காத மனமும், கண்ணனுக்காக உருகாத உள்ளமும், கண்ணனுக்காக ஒழிக்காத ஆசையும் எதற்கு என்று உணர்ந்து தெளிந்து, நம் உள்ளத்தில் கொண்டால், கொண்டல் வண்ணன் நம் மனமாகி கோவிலில் குடியேறுவான்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.