பதிவு செய்த நாள்
30
டிச
2021
10:12
ஆரியன்காவு :கேரளா மாநிலம் ஆரியன்காவில் ஸ்ரீ தர்மசாஸ்தா ஸ்ரீ புஷ்கலா தேவி திருக்கல்யாணம் வைபவத்தை முன்னிட்டு சம்பிரதாய முறைப்படி ஜோதி ரூப தரிசனம், பாண்டியன் முடிப்பு எனும் நிச்சயதார்த்த வைபவம், திருக்கல்யாணம், மண்டலாபிஷேகம் நடந்தது.
சவுராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த புஷ்கலா தேவியை மணந்துகொண்டு, ஆரியன்காவில் அன்னதானப் பிரபுவாக தர்மசாஸ்தா வீற்றிருக்கிறார். இச்சமூகத்தினரை சம்பந்தி முறையாக திருவாங்கூர் மன்னர் பிரான் வம்சத்தினர் கருதுகின்றனர்.இதன் தொடர்ச்சியாக மதுரை ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்கம் மற்றும் திருவாங்கூர் தேவசம் போர்டு இணைந்து இந்த விழாக்களை நடத்துகின்றன.மாம்பழத்துறையில் பகவதி அம்மன் ரூபத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ புஷ்கலா தேவிக்கு டிச., 23ல் அதிகாலை சகல அபிஷேகங்களும் நடந்தன. அம்பாளை ஜோதி ரூபத்தில் தந்திரி ஆவாஹனம் செய்து ஆரியன்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மகாஜன சங்க செயலாளர் எஸ்.எஸ்.மோகனிடம் ஊர் மக்கள் முன்னிலையில் வழங்கினார்.
சாஸ்தாவுடன் ஐக்கியம்: ஆரியன்காவு கோயிலில் தந்திரி புனித நீர் தெளித்து ரூபத்தை ஏந்தி சென்று கர்ப்பகிரஹத்தில் சுவாமி ஜோதியுடன், அம்பாள் ஜோதி ஐக்கியமானது. நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் நடந்தது.
சங்க பொதுச்செயலாளர் எஸ்.ஜெ.ராஜன் நிச்சயதார்த்த உரையாற்ற, எஸ்.எஸ்.மோகன் சடங்குகளை நடத்தினார். அம்பாள் சார்பில் சங்க மூத்த தலைவர் கே.ஆர்.ராகவன், பகவான் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி நிச்சயதாம்பூலம் மாற்றிக்கொண்டனர்.
திருக்கல்யாணம்: டிச., 25ல் ஊஞ்சல் உற்ஸவம், பொங்கல் படைப்பு, அன்னதானம், திருவிளக்கு பூஜை சப்பர புறப்பாடு நடந்தது. இரவு 9:00 மணிக்கு திருக்கல்யாண மண்டபத்தில் கோகுலத்து மடம் தந்திரி வாசுதேவரு, சாந்திமார் முன்னிலையில் புளியரை ஸ்ரீதரன் பட்டர் திருக்கல்யாணத்தை நடத்தினார். அம்பாள் சார்பில் கே.ஆர்.ஹரிஹரன் நடத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.சரவணன், உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.ஏற்பாடுகளை சங்கத் தலைவர் டி.கே.சுப்பிரமணியன், பொருளாளர் டி.எஸ்.ஆனந்தம் உள்ளிட்டோர், நிர்வாகிகள் எஸ்.கே.ரவிச்சந்திரன், டி.கே.எஸ்.சிவா, டி.எஸ்.ஜெயபாலன், எஸ்.சுரேஷ் கண்ணன், ஜெ.கே.விஜிகுமார் ஜெ.எஸ்.கே. கணேஷ் கே.ஆர்.பிரதீப் செய்திருந்தனர்.