அக்காலத்தில், மகரிஷிகள் ஹோமத்திற்கான நெருப்பு பற்ற வைக்க, அரணிக்கட்டையைக் கடைவார்கள். அவ்வாறு அவர்கள் ஒரு சமயம் செய்து கொண்டிருந்த வேளையில், அவ்வழியே ராமபிரான் சீதையோடு சென்று கொண்டிருந்தார். ராமபிரானின் பேரழகைக் கண்ட ரிஷிகள் மயங்கி நின்றனர். பெண்ணாய் பிறந்திருந்தால், அவரைத் திருமணம் செய்திருக்கலாமே என எண்ணினர். அந்த மகரிஷிகளை தன்னோடு சேர்த்துக் கொள்ள விரும்பிய ராமபிரான், அதையடுத்த கிருஷ்ணாவதாரத்தில் ஆயர்பாடியில் அந்த ரிஷிகளை கோபியராக பிறக்கச் செய்தார். முன்ஜென்ம வாசனை யாரையும் விடாதல்லவா? காலையில் எழுந்ததும் ஹோம அக்னிக்காக அரணிக்கட்டையைக் கடைந்தது போல, ஆயர்பாடியில் பெண்ணாகப் பிறந்த ரிஷிகள் தயிரை கடையத் தொடங்கினர். பகவானே பாலகிருஷ்ணராக ஆயர்பாடியில் நேரில் வந்து வெண்ணெய், நெய்யை தானே நேரடியாக எடுத்துக்கொண்டார். ஆண்டாளும் பாவைப்பாடலில் பெண்கள் தயிர் கடையும் ஒலியின் மகத்துவத்தை போற்றுகிறாள். தயிர் கடையும் சத்தம் எழுந்தால் வீட்டில் மங்கலம் உண்டாகும். வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? என்று கடையும் மத்தின் ஒலியைப் பாடுகிறது பாவை பாசுரம்.