பதிவு செய்த நாள்
07
ஜூலை
2012
11:07
திருவாரூர்: திருவாரூர் அருகேயுள்ள பழமை வாய்ந்த ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்தது. திருவாரூர் அருகே கேக்கரையில் ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ராமசாமி பெருமாள் என்னும் பழமை வாய்ந்த ராமர் கோவில் உள்ளது. இதன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்றுமுன்தினம் காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த மூன்றாம் தேதி முதல் ஒன்பது கால பூஜைகள் நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் காலை 9.30 மணியளவில் விமானத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, அதன்பின்னர் ஸ்ரீ ராமர், லட்சுமணர், அனுமார், பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிவர் ஸ்வாமி சிலைகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. தொடர்ந்து மஹா தீபாராதனையும், இரவில் ஸ்ரீ ராமர் வீதியுலாவும் நடந்தது.இதைத்தொடர்ந்து, நேற்று (ஆறாம் தேதி) மாலை ஆறு மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ஜெயக்குமார், ஊழியர் சிவபுண்ணியம், பட்டாச்சாரியார் ராகவன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.