திருப்பூர்:குழந்தைகளிடம் பக்தி மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று, ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசினார்.ஸ்ரீ காஞ்சி காமகோடி பக்த சமாஜம் சார்பில், ஸ்ரீ மஹா பெரியவர் வார்ஷிக ஆராதனையை முன்னிட்டு சுந்தரகாண்டம் சிறப்பு சொற்பொழிவு திருப்பூர் ஓடக்காட்டில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை மடத்தில் நேற்று நடந்தது.இதில், ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் பேசியதாவது:தர்மத்தை நிலைநாட்டும் போது, அதர்மம் தானாக போய்விடும். நல்லவனுக்கும், பக்தர்களுக்கும் ஆபத்து நேரிடும் போது, ஏதாவது ஒரு வகையில் கடவுள் நமக்கு உதவி செய்வார். துன்பம் வரும் போது, துன்பத்தை போக்க வருபவரும் கடவுள் தான். கடவுள் மீதான பக்தியில் வைராக்கியம் இருக்க வேண்டும். ஞானம் மட்டும் இருந்தால் போதாது. எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், அவரை நினைக்க வேண்டும். இன்றைய சூழலில், குடும்பத்தில் குழந்தைகளிடம் பக்தியை ஊற்றி வளர்க்க வேண்டும். அவர்களிடம் பக்தியை புகுத்துங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.