இளைஞர்களான கந்தனும், வேலனும் காட்டிற்கு மரம் வெட்டச் சென்றனர். பகலில் வேலை செய்த அவர்கள், மாலையில் சந்தித்த போது கந்தனிடம் கூடுதலாக விறகுகள் இருந்தன. ஆனால் அவனது முகத்தில் வேலை செய்த களைப்பே தெரியவில்லை. இதைக் கண்ட வேலனுக்கு ஆச்சர்யம். எப்படி சாத்தியமானது எனக் கேட்டான். ‘‘ஆர்வமுடன் விறகுகளை வெட்டினேன்’’ என்றான். ‘‘ஆனால் கொஞ்சமும் களைப்படையாமல் இருக்கிறாயே எப்படி’’ எனக் கேட்டான். ‘‘அவ்வப்போது ஓய்வும் எடுத்து கொள்வேன்’’ என்றான் கந்தன். மறுநாள் வேலன் அவ்வப்போது ஓய்வு எடுத்து விட்டு மரங்களை வெட்டினான். இருப்பினும் அவனால் கந்தனின் நிலையை எட்ட முடியவில்லை. கந்தனை கண்காணித்தால் உண்மை புரியும் என எண்ணி மறுநாள் காலையில் அவனுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்தான். கந்தன் மரம் வெட்டுவதோடு அவ்வப்போது ஓய்வு எடுத்தான். அந்த நேரத்தில் கோடரியை தீட்டி கூராக்குவதைக் கண்டான். ஒய்வு என்பது வேலை செய்யாமல் இருப்பதல்ல. மாற்று வேலையில் ஈடுபட்டு அதன் மூலம் பணியை எளிதாக்குவதே புத்திசாலித்தனம் என்பதை உணர்ந்தான்.