பதிவு செய்த நாள்
06
ஜன
2022
01:01
புதுச்சேரி : எதிர்த்தவர்கள் சரணடையும்போது இயல்பாக தன் அருளை தருபவன் இறைவன் என ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவாற்றினார்.புதுச்சேரி காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி திருப்பாவை சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. நேற்றைய சொற்பொழிவில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் உபன்யாசம் செய்ததாவது:
திருப்பாவையின் 17ம் பாசுரத்தில் நந்தகோபன் மற்றும் கண்ணனின் அறம் செய்யும் வளமையும், 18வது பாசுரத்தில் அவர்களின் தோள் வலிமையும், 19வது பாசுரத்தில் கண்ணனின் காதல் வலிமையும், 20வது பாசுரத்தில் கண்ணனின் செம்மை, ஆர்ஜவ வலிமையை ஆண்டாள் சொன்னார்21வது பாசுரத்தில் நந்தகோபனின் கறவை செல்வ வளமையை சொல்லி உள்ளார். பாசுரத்தின் கடைசி மூன்று அடிகளில், தோற்றுப் போனவர் தன் ஆணவத்தையும், அகந்தையையும் துறந்து, வென்றவர் வாயிற்படி காத்துக்கிடப்பதை போல நாங்கள் உன்னிடம் வந்து சேர்ந்திருக்கிறோம் என்கிறார்.
எதிர்த்தவர்கள் உன் அம்பிற்கு அடிபணிந்தார்ககள். நாங்கள் உன் அன்பிற்கு அடி பணிந்தோம் என்கிறார்கள். எதிர்த்தவர்கள் சரணடையும்போது இயல்பாக தன் அருளை அவருக்கு தருபவன் இறைவன். காகத்தின் கண் ஒன்றை மட்டும் எடுத்துச் சென்ற ராமபாணத்தையும், இன்றுபோய் நாளை வா என்ற ராவணனையும் அனுப்பி வைத்த சீர்மையையும் ஒப்பிட்டு, பகைவருக்கும் அருளும் எம்பெருமானின் காருண்யத்தை எண்ணி, எண்ணி வியக்கலாம். மற்ற ஜோதிகளை பல காரணங்களாகல் மறைக்கவும், அழிக்கவும் முடியும். ஆனால் ஆதியஞ்சோதியை மறைக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால் கண்ணன் சூரியனை சக்கரம் கொண்டு மறைத்தான்.எனவே தான் உலகினில் தோற்றமாய் நின்ற சுடரான கண்ணனை கோதா பிராட்டி எழுப்புகிறாள் என்று அனுபவிக்கலாம்.இவ்வாறு அவர் சொற்பொழிவாற்றினார்.