பழநி: தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாட்டடில் வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பாதயாத்திரை பக்தர்கள் பழநி மலைக்கோயில் கிரிவலம் வந்து கோயில் முன் நின்று வழிபட்டு சென்றனர்.
பழநிக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரையாக பக்தர்கள் வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் அனுமதி இல்லை என அறிவித்தது. ஏற்கனவே திட்டமிட்டு பழநிக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த பக்தர்கள் பலர் பஸ்கள் மூலம் பழநி வந்து தரிசனம் செய்து திரும்பினர். சிலர் தொடர்ந்து பாதயாத்திரையாக நடந்து வந்தனர். இன்று அவர்கள் காவடி எடுத்து அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்த கோவிலுக்குச் செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர். மலைக்கோயில் கிரிவலம் வந்து பாத விநாயகர் கோயில் முன் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். மேலும் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் ஆன்மீகச் சுற்றுலாவில் திட்டமிட்டபடி பழநி வந்து கோயில் முன் நின்று வழிபட்டனர்.