நம்மில் சிலர் இருப்பர். ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்யாமல் பலவிதமான கஷ்டத்தில் சிக்கிக்கொள்வர். பிறகு தனது செயல்களுக்கு நொந்து கொள்வர். ‘திட்டமிட்ட ஒரு செயலை இன்று செய்யாவிட்டாலும் பரவாயில்லை, நாளை செய்து கொள்ளலாம்’ என்று இழுத்தடிப்பதுதான் இதற்கு காரணம். இப்படி அன்றாட பணிகளையே ஒழுங்காக செய்யாத நபர்களிடம், நல்ல செயல்களை செய்ய எங்கே நேரம் இருக்கப்போகிறது. ‘முதுமை காலத்தில் நல்லதை செய்வோம். இப்போது இதற்கு என்ன அவசரம். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்போம்’ என்ற நினைப்பே இதற்கு காரணம். உண்மையை சொன்னால் முதுமை காலத்தில் உங்களுடைய வேலையை செய்வதற்கே உங்களால் முடியாது. அப்படி இருக்கும்போது நல்ல செயல்களை எப்படி செய்வீர்கள்... எனவே நல்ல செயல்களை இளமை காலம் முதலே செய்யத் துவங்குங்கள். முதுமை காலத்தில் அதற்கான பலன்கள் கிடைத்தே தீரும்.