பதிவு செய்த நாள்
18
ஜன
2022
17:37
தஞ்சாவூர்: திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி, நிறைவு நாளான இன்று நடந்த தீர்த்தவாரியின் போது காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பிரகத் சுந்தரகுசாம்பிகை உடனாகிய மகாலிங்கசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தைப்பூச விழாவை முன்னிட்டு ஐந்து தேரோட்டம், காவிரியில் தீர்த்தவாரி நடத்தப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக தேரோட்டம் தடை செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் கவலை அடைந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு, மகாலிங்கசுவாமி கோவிலில் கடந்த 9ம் தேதி பத்து நாள் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கியமாக நேற்று ஐந்து தேரோட்டம் நடந்தது. தைத்தொடர்ந்து விழாவின் நிறைவு நாளான இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் அலங்கரிக்கப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் எழுந்தருளினர். பின்னர் அஸ்திரதேவருக்கு மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து அஸ்திரதேவர் காவிரி ஆற்றில் புனித நீராடியதும், காவிரி கரையில் குவிந்த பக்தர்கள் புனித நீராடி, பஞ்சமூர்த்தி சுவாமிகளை வழிபட்டனர்.