2 ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்: முதல்வர் ஸ்டாலின்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜன 2022 06:01
சென்னை: மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இருந்து வீடியோ கான்பரன்சிங் முறையில், மதுரையில் ரூ.49.74 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.51.77 கோடி மதிப்பு புதிய திட்டங்களையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சங்க கால நகராக இருந்து மதுரையை, நவீன மதுரையாக தி.மு.க., அரசு மாற்றியது. தி.மு.க., ஆட்சியில் பல பாலங்கள் கட்டப்பட்டன. பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மதுரையை மேம்படுத்த வளர்ச்சி குழுமம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்ட பணிகளை கண்காணிக்க 14 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.
மதுரையில் ரூ.500 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படும். சிறைச்சாலை மாநகராட்சி பகுதிக்கு வெளியே மாற்றப்படும். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளில் ரூ.500 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. மதுரையில் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் புதிதாக மேம்பாலம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாராகிறது. ரூ.114 கோடி செலவில் கலைஞர் நூலகம் அமைய உள்ளது. ரூ.25 கோடியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். 2ஆண்டுகளில் மீனாட்சி கோயிலுக்கு குடமுழுக்கு ஏற்படுத்தப்படும். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை காண நிரந்தரமாக நவீன அரங்கம் அமைக்கப்படும். மாடுபிடி வீரர்களுக்கான மருத்துவ சிகிச்சை மையமும் நவீன அரங்கத்தில் இடம்பெறும்.342.33 கோடி மதிப்பு பணிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மக்களின்தேவையை கண்டறிந்து செயல்படும் அரசாக திமுக அரசு இருக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.